வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்றும் அவற்றை இறக்குமதி செய்ய அனுமதித்தால் அந்நியச் செலாவணி கையிருப்புகளில் இருந்து பெருமளவான அமெரிக்க டொலர்கள் வெளியேறும் என்றும் திறைசேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாகன இறக்குமதிக்கான கட்டுபாடுகள் ஒரு வருடத்துக்கு நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நாணய மாற்று விகிதங்கள், அந்நிய செலாவணி கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கணினிகள், அலைபேசிகள் , தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், உதிரிப் பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் கட்டுப்பாடுகளின் நீக்கம் குறித்து அமைச்சு தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.