தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அரச துறை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (03) கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
தொழில் நுட்பத் துறையினரின் அதிகளவிலான பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் திறைசேரியின் சுமையை குறைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துச் சபை மற்றும் மஹாபொல தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்ட திறன்மிக்க பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஊழியர்கள் வழங்கக்கூடிய அரச துறைகள் தொடர்பில் தொழிற்சங்கங்களிடம் இருந்து யோசனைகளை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.