விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்கவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று (19) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியில் அமைந்துள்ள சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதன்போது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகமொன்றை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.
குறித்த பெட்டகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட 18 இலட்சம் ரூபா பணத்திற்கான மூலத்தை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சய சமரசிங்க, நாமல் ராஜபக்ஷவின் பாடசாலைக் காலம் முதலே அவருக்கு நெருக்கமான நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
