காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கக் கோரி சஜித் சபாநாயகரிடம் முறைப்பாடு

0
13

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த பிரேரணைக்கு இதுவரை தீர்மானம் எடுக்கப்படாததால், தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் கடிதமொன்றை கையளித்துள்ளார்.

2026 ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெற்ற காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வது, சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினார்களா என்பதை விசாரணை செய்வது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான துயரச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காண்பது ஆகிய நோக்கங்களுக்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதற்கான பிரேரணை தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு, 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் குழு மூன்று தடவைகள் கூடிய போதிலும் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பிரேரணைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவன்திஸ்ஸ யானையின் மரணம் உள்ளிட்ட வனவிலங்கு வளங்கள் தொடர்பான தேசிய முக்கியத்துவம் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற நியாயமான சந்தேகம் இதன் மூலம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்பாட்டினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த செயற்பாட்டை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பரிசீலித்து, இந்த முறைப்பாட்டை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு அனுப்பி, தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here