2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை (23) தேசிய எதிர்ப்பு தினத்தை அறிவித்துள்ளன.
ஆசிரியர்கள் – அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தாதியர்கள், அலுவலக உதவியாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் அமில சந்தருவன்,
“2024 ஜூன் 20ஆம் திகதி லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஏறி நின்று மஹிந்த ஜயசிங்க உள்ளிட்டவர்கள் என்ன கூறினார்கள்? எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முதலில் ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதே எமது கடமை என்றார்கள்.
ஆனால், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அவ்வாறான சம்பள முரண்பாடுகள் இருக்க முடியாது எனக் கூறுகின்றனர்.
அன்று என்ன கூறினார்கள்? இன்று என்ன கூறுகின்றார்கள்? முன்னைய அரசாங்கங்கள் செய்தபோது தவறானவை எனக் கூறிய விடயங்கள், இந்த அரசாங்கம் செய்யும்போது சரியானதாகிவிடாது. இந்த அரசாங்கம் செய்தாலும் அது தவறுதான்.
எனவே, 25,000 ரூபாய் கொடுப்பனவைக் கோரி எதிர்வரும் 23ஆம் திகதி தேசிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அரசாங்கம் இதற்குப் பதிலளிக்கத் தயாராக இல்லாவிட்டால், வேறு வழியின்றி எதிர்வரும் 30ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களாகிய நாம் பாடசாலை கட்டமைப்பை முடக்க வேண்டிய நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
