பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தாக்கிய சம்பவம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்ததன் மூலம் 12 மாணவர்களின் மாணவர் அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி உபவேந்தருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இந்த 12 மாணவர்களும் கண்காணிப்பு கமரா அமைப்பை அவதானித்ததன் பின்னர் அடையாளம் காணப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த மாணவர்களின் மாணவ அந்தஸ்தை இரத்துச் செய்யும் தீர்மானம் அமுலில் இருக்கும் என்றும் பிரதி உபவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு பொலிஸில் சரணடைந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
N.S