மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பல்வேறு வகையான போதைப் பொருட்களை வைத்திருந்த 47 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய மாணவன் ஒருவனும் மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 கிராம் 630 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 38 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (பொதுவாக ஐஸ் என அழைக்கப்படும்), 207 கிராம் 590 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு நடவடிக்கை காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இடம்பெற்றது.
இந்த வார தொடக்கத்தில், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் நடவடிக்கையில் மேலும் 75 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டிலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியில் எதிர்காலத்தில் இவ்வாறான சோதனைகள் தொடரும் என இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
N.S