டயகம பகுதியில் மின்தாக்கி உயிரிழந்த தொழிலாளி மாரடைப்பில் பலியானதாக நாடகமாடிய தோட்ட வௌிக்கள அதிகாரி கைது!

0
240

நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளதாவது,

டயகம கிழக்கு 3ம் பிரிவில் வசிக்கும் 40 வயதுடைய ராமன் ராமகிருஸ்ணன் என்ற குடும்பஸ்தர் தோட்டத்தின் வௌிக்கள அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று காலை வழமைபோல தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.

தோட்டத்தில் உருளைகிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. பன்றியிடம் இருந்து உருளைக்கிழங்கை பாதுகாக்கவென கம்பியால் சுற்றுவேலி அமைக்கப்பட்டு அதற்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உருளைகிழங்கு தோட்ட உரிமையாளரான வௌிக்கள அதிகாரி அதிகாலையில் மின் இணைப்பை துண்டிக்கத் தவறியுள்ளார்.

அதனால் காலையில் வேலைக்கு வந்த குடும்பஸ்தர் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர் வௌிக்கள அதிகாரி தோட்ட முகாமையாளருக்கு இது தொடர்பில் அறிவித்த பின் அவர்கள் ஒன்றிணைந்து உயிரிழந்த நபரின் சடலத்தை வேறு இடத்திற்கு மாற்றி அவர் திடீர் மார்படைப்பு காரணமாக விழுந்து இறந்ததாக கதையை பரப்பியுள்ளனர்.

பின்னர் தோட்டத்தில் உள்ளவர்கள் குடும்பஸ்தரின் சடலத்தை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது அங்கு இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உண்மை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து டயகம பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு தோட்ட வௌிக்கள அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் கொதிப்படைந்துள்ள தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு நியாயம் வழங்க கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here