Monday, October 21, 2024

Latest Posts

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா நடைமுறை ; இவ்வாரம் அமைச்சரவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

19.12.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

  1. இலங்கை பொருளியல் மற்றும் வணிக நிறுவனத்தை தாபித்தல்

தேசிய கொள்கை வகுப்பின் போதும் அதனை நடைமுறைப்படுத்தும் போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களுக்கு புரிதலுடன் கூடிய தீர்மானங்களை எட்டுவதற்கு இயலுமாகும் வகையில் பொருளியல் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சியைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியமாகும்.

அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ‘இலங்கை பொருளியல் மற்றும் வணிக நிறுவனம்’ எனும் பெயரிலான நிறுவனமொன்றை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பொருளியல் மற்றும் வணிக நிறுவனத்தைத் தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையமொன்றை மொனறாகலை மாவட்டத்தில் தாபித்தல்

மொனறாகலை மாவட்டம் புவிசார் இடப்பரப்பில் இரண்டாவது பெரிய மாவட்டமாக இருப்பினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எந்தவொரு அலுவலகமோ அல்லது பயிற்சி நிலையமோ குறித்த மாவட்டத்தில் இயங்கவில்லை. அம்மாவட்டத்திற்கு அண்மைய பயிற்சி நிலையங்களாக இருப்பது, பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பயிற்சி நிலையம், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பயிற்சி நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.

தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனறாகலை பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. அதன்மூலம் மொனறாகலை மாவட்டத்தில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

அதற்கமைய, தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனறாகலை பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையம் மற்றும் வளாகத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ‘முதலீட்டாளர் வீசா’ வகை
சேவை வழங்குநர்களுக்கான ‘சேவை வழங்குநர் வீசா’ வகை
கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ‘சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்’ வீசா வகை

  1. சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துகின்ற கிராம நிதியளிப்பு வேலைத்திட்டம்

சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கும் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் ‘கிராமிய நிதியளிப்பு வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்ச்சித்திட்டம் 2022.12.31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் 172.35 மில்லியன் ரூபாய்கள் பயனாளிகளுக்கு கடனாக வழங்கப்படவுள்ளது. அதனால், குறித்த வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை 2023.06.30 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. தேசிய கலா பவனத்தை (Art Gallery) மேம்படுத்தி பாதுகாப்பதற்குத் தேவையான மேலதிக நிதியொதுக்கீடு வழங்கல்

தேசிய கலா பவனத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் இவ்வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், நாட்டில் நிலவிய சூழ்நிலையால் குறித்த புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. குறித்த புனரமைப்புக்களில் 80மூ வீதமானவை தற்போது பூர்த்தியடைந்துள்ளதுடன்,

மேலும் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு பீடத்தின் கருத்திட்ட ஆலோசனைப் பிரிவு குறித்த திட்டம் மற்றும் மதிப்பீட்டை தயாரித்துள்ளது. அதற்கமைய, எஞ்சியுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளை 2023 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நிதியொதுக்கீடு வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக் கருத்திட்டத்தின் கடன் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்

ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் தூய சக்திவலு நிதியளிப்பு ஒத்துழைப்பு வசதிகள் மற்றும் வறுமையைக் குறைத்தலுக்கான ஜப்பான் நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வழங்கல்களின் கீழ் மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கருத்திட்டத்தின் பக்கேஜ் 4 இன் கீழ் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்கின்ற திகதியை 2023.11.29 வரைக்கும் நீடிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள இயலுமாகும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கிக் கடன் வசதியின் செல்லுபடியாகும் காலத்தை 2024.03.31 ஆம் திகதி வரைக்கும் நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. இலங்கை பட்டய கப்பல் தரகர் நிறுவனம் (தாபிக்கும்) சட்டமூலம்

இலங்கை பட்டய கப்பல் தரகர் நிறுவனம், இங்கிலாந்தின் பட்டய கப்பல் தரகர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளதுடன், முழுநேர அங்கத்தவர்கள் (Fellow Members) மற்றும் இணை அங்கத்தவர்களுடன் (Associate members) கூடியதாகும்.

இங்கு முக்கிய நோக்கமாக அமைவது, கப்பல் தரகர்களின் தொழில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதாகும். அத்துடன், கல்வி நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகள் மூலம் அங்கத்தவர்களின் துறைசார் தொழிற்பயிற்சித் திறனை அதிகரிப்பதற்கு மற்றும் குறித்த துறைகள் மீது ஆர்வம் காட்டுகின்ற இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதும், குறித்த நிறுவனத்தின் நோக்கமாக அமையும். அப்பணிகளை மிகவும் ஒழுங்குமுறையாகவும் பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவுவதற்காக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அவர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணை மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த உத்தேச சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52(6) ஏற்பாட்டிக் பிரகாரம் சட்;டமூலத்தை விதந்துரைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ‘2022 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள்’ மற்றும் ‘2022 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க செலுத்தல் முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்’ பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுதல்

புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக மத்திய ஒருங்கிணைப்பு நிலையமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனை மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் வாழ்கின்ற 03 மில்லியன் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை எமது நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ‘புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை’ ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்கும், குறித்த அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறையாக மேற்கொண்டு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்

2019.10.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்தியவங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அது உட்சேர்க்கப்படவில்லை. சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் பயன்வாய்ந்ததாகவும் மேற்கொள்வற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை உட்சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  1. இலங்கைப் பொருளாதாரத்திற்கு மலையகத் தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களைப் பாராட்டுதல்

இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழ் சமூகத்தவர்கள் மத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருவதுடன், அவர்கள் பல்வேறுபட்ட வகையில் தேசிய பொருளாதாரத்திற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

அவர்களுடைய ஒத்துழைப்பு பெருந்தோட்டத் துறையின் மொத்த வருமானத்தின் 1/3 பங்காகவுள்ளது. 2023 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் மலையகத் தமிழ் சமூகத்தவர்களின் முதற்குடிகள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பெருந்தோட்டத் துறை அமைச்சு மற்றும் ஏனைய குறித்த அரச நிறுவனங்களும் இணைந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளங் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.