இலங்கையில் தமிழ் மக்களுக்கு இந்தியா நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை நேற்று (18) சந்தித்து கலந்துரையாடிய போதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் விநோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் பானுபிரகாஷ் ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கர் ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்குள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்ததாகவும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு இந்த சந்திப்பின் போது நன்றி கூறியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் இந்தியா அந்தப் பங்களிப்பை செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ளார்.