“எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , அது தொடர்பில் மேலும் கூறியுள்ளவை வருமாறு,
தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.
தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.
ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.
ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.
இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.
அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன். இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன். எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.