நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று (24) பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர்கள் மனப்பூர்வமாகவோ அல்லது அறியாமலோ ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்களா என கேள்வி எழுப்புவதாகவும், அதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை காரணமாக, இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், குழப்பத்தை உருவாக்கும் திட்டம் குறித்து புலனாய்வு அமைப்புகள் தகவல் பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை அளித்துள்ளதாக ஹேரத் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.