“இது எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம். எனவே, அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவதுதான் பொருத்தம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் தனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளட்டும் என்று சவால் விடுத்துள்ளாரே என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுமந்திரன்தான் எனது பெயரை இழுத்துக் கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றார். நான் அவரது பெயரை வலியுறுத்துவதைக் கன காலமாகத் தவிர்த்து வந்துள்ளேன். இது எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம். எனவே, அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவதுதான் பொருத்தம்.
தனிநபர் சுமந்திரனைப் பற்றி சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. ஆனால், உண்மை என்னவெனில் அவரது அரசியல் மிக மோசமான அரசியலாக கடந்த 15 வருடங்களாக இருந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவரது செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரக் கூடிய சூழல் கடந்த 15 வருடங்களாக இருந்திருக்கின்றது. அதிலிருந்து தமிழ் மக்கள் தப்பினது தெற்கில் நடந்த சில குழப்பங்களால்தான்.
தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்குரிய இணக்க அரசியலை சம்பந்தனும் சுமந்திரனும் செய்வதற்குத் தயாராக இருந்தாலும் கூட தெற்கிலே இருந்த அரசியல் நிலைமைகள் அதைக் குழப்பியது.
2015 இல் மிக மோசமான ஏக்கிய இராட்சிய என்ற இடைக் கால அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலே இருந்த கருத்து வேறுபாடுகள் போட்டித் தன்மை காரணமாக அதனை ஒரு நிறைவுக்குக் கொண்டு போக முடியவில்லை. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களாக் கொண்ட ஓர் அமைப்பாக இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தார்கள்.
எழுத்து மூலமாகக் கூட தமது ஒப்புதலைக் கொடுத்திருந்தார்கள். இது ஒரு சிங்கள பெளத்த நாடாக மாற்றியமைக்கத் தாம் எதிர்ப்பல்ல என்பதை எழுத்து மூலமாகக் கொடுத்திருந்தார்கள். மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்திச் சட்டம் தெரியாத சாதாரண மக்களுக்கு அதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எம்மிடம் இருக்கின்றது. அதை நாம் தொடர்ந்தும் செய்வோம்.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனிப்பெரும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. வடக்கு, கிழக்கில் 18 தமிழ்ப் பிரதிநிதித்துவத்தில் 10 ஆசனங்களை முன்னணிக்கு மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஜே.வி.பி. தலைமையிலான புதிய அரசு நாடாளுமன்றத் தேர்தலின் பின், 2015 புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபை நிறைவேற்றுவதனூடாக தமழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக அறிவித்துள்ளது.
ஜே.வி.பி. இடைக்கால அறிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதெனில் அது எவ்வாறானதாக இருக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். மோசமான பிற்போக்குவாத இடைக்கால அறிக்கையைத் தயாரித்து தமிழ் மக்களின் ஆணையோடு நிறைவேற்றத் தமிழ்த் தரப்பு முண்டியடிக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைத்தால் பேசச் செல்வோம். ஆனால், இடைக்கால வரைபை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்த அடிப்படையில் நாம் செல்லமாட்டோம். சமஷ்டி தொடர்பாக – தமிழ் மக்களின் தீர்வு விடயமாக இருந்தால் நிச்சயமாகச் செல்வோம்.
இதனை நாம் எம்மை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் பிரதிநிதிகளிடமும் தெரிவித்துள்ளோம்.” – என்றார்.