சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட குவேரா டி சோய்சா முடிவு

0
35

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்காக 2027/28 ஆண்டிற்குத் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சோய்சா தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட சட்டத் துறையின் மூத்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சட்டத் தொழில்நுட்ப நிபுணர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கலான சவால்களை முன்னிட்டு, சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வலுவான மற்றும் அனுபவமிக்க தலைமை அவசியம் என்பது சட்டத்தரணி சமூகத்தின் பெரும்பான்மையான கருத்தாக இருப்பதாக அந்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர்களான டாக்டர் ரோமேஷ் டி சில்வா, இக்ராம் மொஹமட், டபிள்யூ. தயாரத்ன, ஜெஃப்ரி அலகரட்ணம், டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ, காலிங்க இந்ததிஸ்ஸ, யூ.ஆர். டி சில்வா மற்றும் சாலிய பீரிஸ் ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட டாக்டர் கே. கனகீஸ்வரன், டாக்டர் ஃபயிஸ் முஸ்தபா ஆகியோரும், கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் பல சட்ட நிபுணர்களும் குவேரா டி சோய்சாவின் வேட்புமனுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வர்த்தக சட்டம் மற்றும் சிவில் சட்டம் ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணியாக குவேரா டி சோய்சா சட்டத் துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.

அவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தேசிய சட்ட மாநாட்டின் தலைவராக பணியாற்றியதுடன், 2017 ஆம் ஆண்டு சட்டத்தரணி சங்கத்தின் சமூக மற்றும் நலன்புரி குழுவின் தலைவராகவும் தேசிய சட்ட வாரத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் 8000-க்கும் அதிகமான இளைய சட்டத்தரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைய சட்டத்தரணி குழுவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

அத்துடன், தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களின் கீழ் சிவில் வழக்கு நடைமுறை, அறிவுசார் சொத்துரிமை சட்டம், வர்த்தக சமரசம், தீர்ப்பாயம் மற்றும் நிறுவன சட்டம் போன்ற பாடப்பிரிவுகளில் வளவாளராகவும் பங்களித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here