ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், புதிய திருப்பமாக அவர் உயிரிழந்த அறையிலிருந்து மற்றுமொரு பச்சை நிற நாடா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) அறிவித்துள்ளனர்.
அரச இரசாயன பகுப்பாய்வாளரின் ஆலோசனைக்கு அமைய கண்டெடுக்கப்பட்ட இந்த நாடாவை, மேலதிக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துவதற்கான உத்தரவை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதேவேளை, மரணம் நிகழ்ந்த வீட்டின் நான்கு கோணங்களிலான CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டதில், சந்தேகத்திற்கிடமான நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை மீட்டெடுப்பதற்காக, அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பின் ஊடாக அதனை ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
