தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ, பாதாள உலகக் குழுக்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ அஞ்சிச் தனது நடவடிக்கைகளைப் பின்வாங்கும் ஆட்சி அல்ல என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்க்கட்சியினர் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பாதாள உலகக் குழுக்களுக்கோ, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ அடிபணியும் அரசாங்கம் நாங்கள் அல்ல. ஆனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கலாம். அதற்குப் பிறகு வேறு எந்த காரணமும் இல்லை.
ஏற்கனவே பாதாள உலகச் செயல்பாடுகளை நாட்டில் கணிசமான அளவில் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எதற்கும் நாங்கள் தலைகுனியவில்லை.
இந்த நாட்டின் ஆட்சிக்கு வந்தது எவருக்கும் அடிபணிந்து எங்கள் நடவடிக்கைகளை கைவிடுவதற்காக அல்ல. மக்கள் முன் அளித்த வாக்குறுதிகளின்படி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எங்கள் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். இதுகுறித்து யாரும் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை,” என்று தெரிவித்தார்.
தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்தக் கருத்துகளை நேற்று (28) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெளியிட்டார்.
