நளின் பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு SJBக்கு கோரிக்கை!

0
14

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படும் 39 ட்ரோன் விமானங்களும் 16 மைக்ரோபோன்களும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பொருட்கள் நேற்று (08) நண்பகல் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ட்ரோன்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் (ICL), தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (MoD) அனுமதி ஆகியவை அவசியமாகும்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அனுமதிகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மக்கள், “அதிகாரம் கிடைத்தால் இவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள்?” என்ற கேள்வியுடன் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்கனவே பாரிய அரசியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பாதிப்பைச் சரிசெய்வது கடினம் என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக, ஊழல் எதிர்ப்பையே தனது பிரதான அரசியல் பிரசார ஆயுதமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், நளின் பண்டாரவின் ட்ரோன் சம்பவத்திற்குப் பின்னர், ஆளும் தரப்பினருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் ஊடக விவாதங்களிலும் அவர்கள் எவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கமைய, நளின் பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முதல் கட்டமாக அவரது கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மத்தியிலேயே கருத்துகள் எழுந்துள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

39 ட்ரோன்களும் 16 மைக்ரோபோன்களும் ஒருவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ அல்லது உரிய ஆவணங்கள் இல்லாததை மறந்துவிட்டு பயணப் பொதியில் வைத்துக் கொண்டுவரக்கூடிய அளவிலான பொருட்களோ அல்ல என அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மனைவியும் அறிந்தே மேற்கொண்டதாகத் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலஞ்சம் தொடர்பான சம்பவமொன்றில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை அக்கட்சி இடைநிறுத்தியிருந்தது.

அதே நடவடிக்கையைத் தனது நாடாளுமன்ற உறுப்பினர் விடயத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கத் தயாராக உள்ளதா அல்லது அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.

இதன் மூலம் ஊழல் எதிர்ப்பு என்ற அரசியல் கோஷத்தின் மீதான ஐக்கிய மக்கள் சக்தியின் உண்மையான அர்ப்பணிப்பு எந்தளவில் உள்ளது என்பதை மக்கள் மதிப்பிட முடியும் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here