அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (09) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
கள உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதான செயலாளரும் சட்டத்தரணியுமான அனுராத செனவிரத்ன,
“நாட்டிலுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குப் பிரிவுகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் தேசிய அடையாள அட்டை அலுவலகங்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு அலுவலகங்களின் உள்வாரிப் பணிகளில் பெரும்பகுதியை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்காதபோது இந்த அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படும்.
தேர்தலுக்கு முன்னர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாநாட்டில், முதலாவது 10 அமைச்சரவைப் பத்திரங்களுக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
ஜனாதிபதி நேற்று கூட கொடுப்பனவுகளை 100 சதவீதத்தால் அதிகரிக்கப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தற்போது 300 ரூபா மாத்திரமே களக் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
அந்த 300 ரூபாவை 600 ரூபாவாக அதிகரிப்பதையே ஜனாதிபதி குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். இன்றைய நிலையில் அந்தத் தொகை ஒரு லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்வதற்குக் கூடப் போதுமானதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் 12 தொழிற்சங்கங்களின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
