முக்கிய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (29) காலை 11.00 மணிக்கு கொழும்பில் விசேட பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய,
“இது எந்த ஒரு தனிநபரையோ அல்லது நீதிபதியையோ பற்றிய பிரச்சினையல்ல. இது நீதித்துறையின் சுயாதீனம், அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பாதுகாப்பது தொடர்பான மிக முக்கியமான தேசிய விடயமாகும்.
இத்தகைய அடிப்படை அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் பரந்த பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கலந்துரையாடல், வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, இந்த முக்கிய தேசிய விடயத்தை விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் விசேட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மரியாதையுடன் அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
