22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம், வழக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்படுவதுதான் எனவும், எனவே அவர்களின் எதிர்ப்பை அரசாங்கம் சிறிதளவும் பொருட்படுத்தப் போவதில்லை எனவும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“பொதுவாக ஜனநாயகம் நிலவும் எந்தவொரு நாட்டிலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஒன்று இருக்கும். தவறான விடயங்களை விமர்சிப்பதும், நல்ல விடயங்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களின் பொறுப்பு. அதேபோல், விமர்சனங்களை முன்வைக்கும்போது ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டும்.
ஆனால், எமது எதிர்க்கட்சி முழுமையாக கோபமும் வெறுப்பும் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்தை நாளை வீழ்த்த வேண்டும், இன்று வீழ்த்த வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழுவாகவே அவர்கள் உள்ளனர்.
அதற்கான காரணமும் எமக்கு தெளிவாகத் தெரிகிறது. அந்தக் காரணம் வழக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்படுவதுதான்.
எனவே, இந்த எதிர்க்கட்சி என்பது வெறுமனே ஒரு ‘சர்க்கஸ்’ தவிர, மக்களின் நலனுக்காக செயல்படும் எதிர்க்கட்சி அல்ல. அதனால் அவர்களின் எதிர்ப்பை நாங்கள் சிறிதளவும் பொருட்படுத்தப் போவதில்லை.
இருப்பினும், அவர்கள் ஏதேனும் ஆக்கபூர்வமான கருத்தை முன்வைத்தால், அதனை பரிசீலித்து அதற்கேற்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.”
நீதித்துறை அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்தக் கருத்துகளை நேற்று (19) களுத்துறை சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது வெளியிட்டார்.
