எதிர்வரும் திங்கட்கிழமை (31) முற்பகல் முதல் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச மருந்தாளுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மருந்தாளுநர்களுக்கான கூடுதல் சேவை கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவிக்கையில்,
“இந்த வருடம் பெப்ரவரி மாதம் சுகாதார அமைச்சிடம் எமது மேலதிக நேர சேவை கொடுப்பனவின் உத்தியோகபூர்வ பெயரை ‘கூடுதல் சேவை கொடுப்பனவு’ என மாற்றுமாறு கோரிக்கை விடுத்தோம்.
அதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளரால் கூடுதல் சேவை கொடுப்பனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்தச் சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பின்னர், மருத்துவர்களால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அந்த அழுத்தத்தின் அடிப்படையில் சுகாதார அமைச்சு குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்துள்ளது.
திங்கட்கிழமைக்குள் அந்தச் சுற்றறிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.”
