முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.ஆர். ஜயவர்தன எப்போதும் ஜனநாயக சோசலிசத்தை முன்னிறுத்தியதாகவும், ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஜே.ஆர். ஜயவர்தன ஆரம்பித்த 17 ஆண்டு காலப் புரட்சி நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துகளை அவர் நேற்று (17) கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்ற “ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி நிர்வாகமும் நடுநிலைவாதமும்” என்ற தலைப்பிலான அறிஞர் கலந்துரையாடலில் உரையாற்றும்போது தெரிவித்தார். இந்த நிகழ்வு சமகி ஜன பலவேகயவுடன் இணைந்த மஹாமான்ய டி.எஸ். சேனாநாயக்க அரசியல் விஞ்ஞான பீடத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 4 பில்லியன் எனவும், 17 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்தபோது அது 5,000 பில்லியனைத் தாண்டியிருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேபோன்று, அக்காலத்தில் பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 மில்லியனாக இருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிறைவடையும் போது அது 4.1 மில்லியனாக அதிகரித்ததாகவும், தற்போது அது 3.9 மில்லியனாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், அக்காலத்தில் சுமார் 10 சதவீத வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மட்டுமே மின்சாரம் கிடைத்திருந்த நிலையில், தற்போது மின்சார வசதி சுமார் 95 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அக்காலத்தில் சுமார் 40 சதவீத வீடுகளுக்கு மாத்திரமே நிரந்தர கூரையும் சீமெந்து சுவர்களும் இருந்ததாகவும், ரணசிங்க பிரேமதாசவின் வீடமைப்புத் திட்டங்களின் காரணமாக இன்று அது 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இவை அனைத்தும் ஒரு வகையான புரட்சி எனக் குறிப்பிட்ட அவர், பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் கூறினார்.
17 ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின் புரட்சியின் காரணமாகவே நாடு வறுமையிலிருந்து மீண்டதாகவும், அந்தப் புரட்சியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமகி ஜன பலவேகயவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
