கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேற்கு மாகாணத்தில் உள்ள 7 வழித்தடங்களில் நாளை (29) முதல் 104 மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் நாளை முதல் இந்த சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பை மையமாகக் கொண்ட 7 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளதுடன், பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நேர அட்டவணைகளுக்கு அமைவாக தங்களது இலக்குகளைச் சென்றடையக்கூடிய வகையில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கொழும்புக்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையையும், குறிப்பாக ஒரே பயணியுடன் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதே இந்த புதிய பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என திலகரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பலர் அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிப்பதால், நாளாந்த போக்குவரத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
