இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளமாக மாத்திரம் சுமார் 5.15 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோதே இந்த விடயம் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர், யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் மொத்தமாக 5,150,626 ரூபாய் சம்பளமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையானது சம்பளத்தை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதாகவும், மேலதிகக் கொடுப்பனவுகள் எதுவும் அதில் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்படும் பணமோசடி தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
