– எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
சமகி ஜன பலவேகய கட்சி முதலாளித்துவக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டாலும், மத்திய பாதையைப் பின்பற்றி தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் மத்திய பாதையைப் பின்பற்றி தேசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், சமகி ஜன பலவேகயவும் சமூக ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றி நீதி, நியாயம் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமகி தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் செயலாளர் தர்மதாச சில்வா ஆகியோரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்துகொண்டதுடன், தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.
இதில் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்ததாவது:
சமகி ஜன பலவேகய என்பது வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியலில் காணப்படும் சிறந்த கொள்கைகளை ஒன்றிணைத்து மத்திய பாதையைப் பின்பற்றும் அரசியல் கட்சியாகும். உலக நாடுகளின் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, தற்போது மத்திய பாதைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் செல்வத்தை உருவாக்குவதற்கு தீவிர இடதுசாரிக் கொள்கைகளுக்குப் பதிலாக வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் அவசியம் எனத் தெரிவித்த அவர், உருவாக்கப்படும் செல்வத்தை மனிதாபிமான முதலாளித்துவம் மற்றும் சமூக ஜனநாயகக் கொள்கைகள் ஊடாக மக்களிடையே நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பல நாடுகளில் தீவிரவாத அரசியல் கொள்கைகள் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையும் அந்த மாற்றத்தைப் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்திற்குத் திறந்த பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான முதலாளித்துவம் அவசியம் என்றும், அதேவேளை உருவாக்கப்படும் செல்வம் மக்களிடையே நியாயமாகப் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் நண்பர்களுக்குச் சாதகமான முதலாளித்துவ முறையைத் தோற்கடிக்க வேண்டும் எனவும், இடதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மக்களை விட கோடீஸ்வரர்களே வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தாலும், அவை உரிய முறையில் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களை வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்தாமல், அவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதே சமகி ஜன பலவேகயவின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட மக்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாகவும் சிறு தொழில்முனைவோராகவும் உருவாக்குவதன் மூலம், தோட்ட நிறுவனங்களைச் சார்ந்து வாழும் நிலைமையிலிருந்து அவர்களை விடுவிப்பதே தமது கட்சியின் இலக்கு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
