நாமல் வழக்கில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் உதவி கோரல்

0
11

இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, முறையீட்டின் முதலாவது மற்றும் இரண்டாவது சாட்சிகளுக்கு உரிய அழைப்பாணைகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சாட்சிகள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருவதால், வெளிவிவகார அமைச்சு ஊடாக அழைப்பாணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை உரிய முறையில் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கிற்காக நாமல் ராஜபக்ச இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here