அரசாங்கம் திரட்டும் அனைத்து வருமானங்களையும் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்காக செலவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டைக் கட்டியெழுப்புவது தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியதிகாரம் வழங்கியதன் மூலம் மாத்திரம் சாத்தியமாகிவிடாது என்றும், அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும், குறிப்பாக அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அரச ஊழியர்கள் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபடுவதோ அல்லது கறுப்புப் பட்டி அணிவதோ அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் வளமான நாட்டை நோக்கி அழைத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.
நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ என்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
