மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், தேர்தல் தாமதத்திற்கு காரணமான சட்டத் தடைகளை நீக்குவதற்கான நான்கு மாற்று வழிகளை அவர்கள் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய நடைமுறையை ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், தேர்தல் தொடர்பான சட்ட நிலைமை தற்போது தெளிவாகியுள்ளதாகவும், பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட வேண்டிய சிறந்த தீர்வு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது குழு தேர்தல் முறையையும், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை சட்டத்தில் எவ்வாறு உள்ளடக்குவது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். அதன்மூலம் மேலும் தாமதமின்றி தேர்தலை நடத்த முடியும்.”
சட்டமா அதிபரின் கருத்துப்படி, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் 3A(14) பிரிவின் கீழ் எல்லை நிர்ணயக் குழு தன் அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தேர்தலை நடத்துவதில் சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிர்வாக நடவடிக்கைகள் அல்லது சட்ட விளக்கங்கள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றும், பாராளுமன்றம் புதிய சட்டங்களை இயற்றுவதே ஒரே சட்டபூர்வமான தீர்வாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள 4 மாற்று வழிகள்
- 2017 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டத்தை ரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த பழைய தேர்தல் முறைக்கு திரும்புதல்.
- 2017 திருத்தத்தை புறக்கணித்து, முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல்.
- 2017 திருத்தத்தை முழுமையாக ரத்து செய்து, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவ ஏற்பாடுகளுடன் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல்.
- 3A பிரிவின் கீழ் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தி, அடுத்த கட்டத்திலிருந்து எல்லை நிர்ணய செயல்முறையை மீண்டும் ஆரம்பித்தல்.
சட்டமா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, 2017 திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால் அதன்மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களின் அதிகரிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும். எனினும் புதிய சட்டத்தின் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவோ அல்லது மீண்டும் அறிமுகப்படுத்தவோ முடியும். அதேபோல், பாராளுமன்றம் விரும்பினால் இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் சேர்க்க முடியும்.
ஆனால் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வெறும் பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்த முடியாது; அதற்காக முறையான சட்டத் திருத்தமோ அல்லது புதிய சட்டமோ அவசியம் என சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
