யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா பயணிகளும், படகின் பணியாளர்கள் இருவருமாக 14 பேர் குறிகாட்டுவான் நோக்கி தமது பயணத்தினை நேற்று (12) மாலை ஆரம்பித்துள்ளனர்.
நெடுந்தீவுக்கும் , குறிகாட்டுவானுக்கும் இடையில் கடலில் படகு திடீரென பழுந்தடைந்துள்ளது அத்துடன் படகினுள் கடல் நீரும் உட்புக தொடங்கியுள்ளது.
அந்நிலையில் படகில் இருந்த பணியாளர்கள், இருவரும் படகில் இருந்து வெள்ளைக்கொடியை அசைத்து காட்டியுள்ளனர். அதனை பிறிதொரு படகில் சென்றவர்கள் அவதானித்து, குறித்த படகினை நோக்கி விரைந்துள்ளனர்.
படகு நீரில் மூழ்கிய வண்ணம் காணப்பட்டதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் தமது படகுக்கு ஏற்றியுள்ளனர். அவ்வாறு ஏற்றிய போதிலும், 12 பேர் படகில் ஏறிய நிலையில், இருவர் படகில் ஏற முதல் பழுதடைந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்நிலையில் இருவரும் கடலில் நீந்திய பாதுகாக்க வந்த படகில் ஏறியுள்ளனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு தமது படகில் விரைந்து, மூழ்கிய படகில் இருந்து காப்பற்றப்பட்டவர்களை தமது படகில் ஏற்றி குறிகாட்டுவான் கரைக்கு கொண்டு வந்தனர்.
குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான கடற்பயணம் சுமார் ஒரு மணி நேரமாக காணப்படும் நிலையில், சேவையில் ஈடுபடும் படகுகள் குறித்து கண்காணிப்புக்களும், படகில் செல்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிவதனை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.