மத்திய வங்கியின் சுயாதீனம் குறித்து எவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, 2026ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு கையிருப்பு இலக்கு 10.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 8.8 பில்லியன் டொலர்களாக திருத்தப்பட்டது.
ஆனால் தற்போது 8.8 பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டிய நிலையில் சுமார் 6.5 பில்லியன் டொலர்களே உள்ளன. மாதத்திற்கு 250 முதல் 300 மில்லியன் டொலர்களை மாத்திரம் சேகரிப்பது என்பது இலகுவான விடயமல்ல.
மத்திய வங்கியின் சுயாதீனம் குறித்து பேசப்பட்டாலும், 2024 செப்டெம்பரில் அரசாங்கம் மாறியபோது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. அதன் பின்னர் IMF மூலம் கையிருப்பை அதிகரிப்பதற்காக மூன்று தவணைகள் கிடைத்தன. ஒவ்வொரு தவணையும் 330 மில்லியன் டொலர்கள் என்ற அடிப்படையில், சுமார் 990 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன.
அப்படியானால் குறைந்தபட்சம் 7.1 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6.591 பில்லியன் டொலர்களே உள்ளன.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள், பங்குச் சந்தைக்கு வரும் முதலீடுகள் மற்றும் மத்திய வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்தால், கையிருப்பு இதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஆரம்பத்தில் இருந்த 6.1 பில்லியன் டொலர்களுடன் IMF வழங்கிய 990 மில்லியன் டொலர்களை சேர்த்தால்கூட, சுமார் 500 மில்லியன் டொலர்கள் கையிருப்பிலிருந்து குறைந்துள்ளன. இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
கிடைக்கும் வெளிநாட்டு கையிருப்பிலிருந்தே ரூபாயைப் பாதுகாப்பதற்காக இந்த டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இதன் அர்த்தம்.
எனவே, வெளிநாட்டு கையிருப்பைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் இறுதியில் இதன் சுமையை அரசாங்கமே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மத்திய வங்கியின் சுயாதீனம் என்று அவர்கள் கூறுவார்கள். அரசாங்கம் தனது நிதிக் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறலாம். அவர்கள் வழங்கப் போகும் பதில் என்னவாக இருக்கும் என்பதை நான் இப்போதே கூறுகிறேன்.
நான் மிகவும் அக்கறையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இது எமது நாடு. இது பச்சை, நீலம், சிவப்பு அல்லது ஊதா என்ற பிரிவுகளைக் கொண்ட விடயம் அல்ல. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமை கொண்டுள்ளோம்,” என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க இந்தக் கருத்துகளை நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
