எல் நினோ வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.3,000 மில்லியன் ஒதுக்கீடு

0
157

எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக விவசாயக் காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதற்காக அரசாங்கம் 3,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராச்சி, மொனராகலை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெல், சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, நெல் பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரை மொனராகலை மாவட்டத்தில் 1,401 ஏக்கர், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர், ஹம்பாந்தோட்டையில் 783 ஏக்கர், அம்பாறையில் 1,055 ஏக்கர் மற்றும் அனுராதபுரத்தில் 1,923 ஏக்கர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 7,000 விவசாயிகளுக்குச் சொந்தமான 8,000 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அரசாங்கம் 3,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

தற்போது விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் கள அதிகாரிகள் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் உள்ளிட்ட குழுக்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பயிர் சேதங்களை மதிப்பீடு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் முன்னர் விரைவாக இழப்பீட்டுத் தொகையை வழங்கி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ.100,000 வீதம், அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையிலான நிலப்பரப்புக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இதுவரை பயிர்ச் சேதம் தொடர்பில் அறிவிக்காத விவசாயிகள், விரைவில் கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அல்லது விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் அபிவிருத்தி/கள அதிகாரிகளை சந்தித்து தமது பயிர்ச் சேதம் குறித்து அறிவிக்க வேண்டும்.

அல்லது, கமநல அபிவிருத்தி நிலையங்களில் பராமரிக்கப்படும் பயிர்ச் சேத அறிவிப்பு பதிவேட்டில் தமது சேதம் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் விவசாயிகள், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் 1918 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here