நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இத்தீர்ப்பை அறிவிக்கும். மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இத்தீர்ப்பை வழங்கவுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட எட்டு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கியவர்கள் மற்றும் சதி முயற்சிகள் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளின் 10 ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றம் சாட்சிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டு தயாரிக்கும் இரசாயனப்பொருட்கள் உள்ளிட்ட 2,076 வழக்குச் சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நடந்து முடிந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பு சங்ரிலா உள்ளிட்ட மூன்று சுற்றுலா விடுதிகள் மற்றும் ட்ரபிக்கல் இன் உணவகம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எட்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 40 பேர் உட்பட 274 பேர் உயிரிழந்தும் 577 பேர் காயமடைந்துமிருந்தனர்.
இதன்படி சட்டமா அதிபரால் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் தனித்தனியாகவும் பொதுவானதாகவும் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்கின் சாட்சி விசாரணை தொடங்குவதற்கு முன்னர் 17 ஆவது பிரதிவாதி சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணமடைந்ததால் குற்றப்பத்திரம் திருத்தப்பட்டு 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட விசாரணைப் பிரிவுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலமாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதம நீதியரசருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் அப்போது மேல்நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றிய தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரைக் கொண்ட விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டது.
சிங்கள மொழியில் சமர்ப்பிக்கப்பட்ட 5,000 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிகை 2021 ஒக்டோபர் 04 மற்றும் 2021 நவம்பர் 23 ஆகிய காலப்பகுதிக்குள் திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டது.
பிரதிவாதிகளின் கோரிக்கைக்கு இணங்க, அந்த குற்றப்பத்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு 2022 மார்ச் 03 அன்று பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டது.
