சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பராமரிக்கப்படும் சரக்கு பதிவேடு (Inventory Book) காணாமல் போயுள்ளதாக, அந்த இல்லத்தின் முகாமையாளர் பசன் அத்துகோரள, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கடந்த 28ஆம் திகதி அந்த இல்லத்தின் முகாமையாளரிடம் விசாரணை நடத்தியபோதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆணைக்குழு அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் முகாமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சரக்கு பதிவேட்டைப் பொறுப்பில் வைத்திருந்த சபாநாயகரின் தனிப்பட்ட பணிக்குழு அதிகாரியிடம் அந்தப் பதிவேடு தற்போது இல்லை என தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் அந்தப் பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும் முகாமையாளர் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதிவுகள், மின்சாரம், நீர் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்களையும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற நிர்வாகப் பிரிவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதி செயலாளர் மற்றும் பணிக்குழுத் தலைவர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த சில பொருட்களை தாம் தற்போது வசித்து வரும் மற்றொரு உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கும் எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
