முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்த 6.97 ஏக்கர் காணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகளைத் தவிர்த்து, வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த அரச காணிகளை மக்களின் பயனுள்ள பயன்பாட்டிற்காக விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் மற்றுமொரு கட்டமாகவே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் 6.97 ஏக்கர் காணி பொதுமக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் அதிகாரிகள், குறித்த காணியை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் முன்னிலையில், மணல்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம், 59ஆவது படைப்பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
