2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை, 2022ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டிலேயே என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“2022ஆம் ஆண்டு கடன்களைச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டில்தான் இந்தச் சம்பள உயர்வுகளும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திறைசேரியை வறட்சியடையச் செய்தோ அல்லது நிதி நிலையைப் பாதித்தோ சம்பள உயர்வுகளையும் நிவாரணங்களையும் வழங்க முடியாது. அது யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையல்ல.
எனவே, ஏனைய தரப்பினருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தவறானவை என யாராவது கருதினால், அது குறித்து தனியாக ஆராயத் தயாராக இருக்கிறோம்.
எமக்குக் கிடைக்காவிட்டால் ஏனையவர்களுக்கும் கிடைக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் யாராவது இருந்தால், அது குறித்தும் தனியாகக் கலந்துரையாடலாம்.
அனைவருக்கும் வழங்கக்கூடிய நிதி நிலைமைக்கு ஏற்பவே அடிப்படைச் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினரும் பொறுமையாக இருக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டங்களில் அது தொடர்பாக நிச்சயமாகக் கவனம் செலுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
