IMF திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் ஒரே அரசாங்கம் NPP

0
7

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தற்போது முன்னெடுத்து வருவது 17ஆவது வேலைத்திட்டம் எனவும், அவற்றில் மிகவும் தொழில்முறை ரீதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் முதலாவது அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, எமது குழுவினர் திறமையானவர்கள் அல்ல என்றும், ஹர்ஷன சூரியப்பெரும போதுமானவர் அல்ல என்றும் எதிர்தரப்பினர் கூறினர். வேறு நபர்களை பணியமர்த்துமாறும் ஆலோசனை வழங்கினர்.

ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மிகவும் தொழில்முறை ரீதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் நிறைவு செய்யும் முதலாவது அரசாங்கமாக நாம் இருக்கிறோம் என நான் கருதுகிறேன்.

முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும்போது ஒன்றைக் கூறுவார்கள். அங்கு சென்றதும் அடிபணிவார்கள். நாம் அவ்வாறு செயற்படுவதில்லை. மிகவும் திறமையான குழுவொன்றையே நாம் அனுப்பினோம். இதனை சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் தொடர்ந்துகொண்டே நாம் சம்பள அதிகரிப்புகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

வெளிநாடுகளின் இடதுசாரித் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் எம்மிடம் முதலில் கேட்கும் கேள்விகள் இவைதான்.

‘சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்துகொண்டு எவ்வாறு சம்பளத்தை அதிகரித்தீர்கள்? எத்தனை அரச நிறுவனங்களை விற்பனை செய்தீர்கள்?’ என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கும்.

நாம் எந்தவொரு நிறுவனத்தையும் விற்பனை செய்யவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இருந்துகொண்டே சமூக நலத்திட்டங்களை அதிகரித்துள்ளோம். அதேபோன்று, ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான பெறுமதியையும் அதிகரித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று (20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here