பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலத்தில் சிவிலியர்கள் பெற்றிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
”உயிர் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கடந்த காலத்தில் சிவிலியர்கள் பலர் பாதுகாப்பு அமைச்சில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பெற்றிருந்தனர்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. குறித்த காலப்பகுதியில் 85 வீதமான துப்பாக்கிகள் மீள கையளிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த கால எல்லை ஒக்டோபர் 30ஆம் திகதிவரை பின்னர் டிசம்பர் 31ஆம் திகதிவரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் ஜனவரி 20ஆம் திகதிக்குப் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இன்னமும் பலர் துப்பாக்கிகளை கையளிக்கவில்லை. ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளை கையளிக்க வேண்டும். கையளிக்காதவர்களுக்கு எதிராக 1916ஆம் ஆண்டு 33ஆம் ஆண்டு துப்பாக்கி சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.
பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த பணியை முன்னெடுக்கிறது. இதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.