தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு: தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
சந்தனப்பேழையில் ‘கேப்டன்’ உடல்: தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றிருந்தன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது உறவுகளும், நண்பர்களும், தொண்டர்களும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.
மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்: முன்னதாக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.
பின்னர், தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தாலும், அவர்களின் கண்ணீராலும் நிரம்பின. | பார்க்க > தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை… மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் – புகைப்படத் தொகுப்பு
இறுதி அஞ்சலி: முன்னதாக நேற்று (டிச.28) அதிகாலை 6.30 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த அங்கிருந்து உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடிய விடிய தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தீவுத்திடலில் இன்று காலை விடிந்ததில் இருந்தே திரைப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திவந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் இன்று அஞ்சலி செலுத்தினர்.அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்களுடன் ஆயிரக்கணக்கான மக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பார்க்க > விஜயகாந்த் உடலுக்கு அரசியல், திரைப் பிரபலங்கள் இறுதி அஞ்சலி – புகைப்படத் தொகுப்பு
பின்னர், பிற்பகலில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டபோது வழிநெடுகிலும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். மக்கள் கண்ணீருடன் விடைபெற்றார் கேப்டன்.
72 குண்டுகள் முழங்க… – வாகனத்தில் இருந்து விஜயகாந்தின் உடலை காவல் துறையினர் சுமந்து வந்தனர். பின்னர் சரியாக மாலை 6 மணிக்கு காவல் துறையினர் விஜயகாந்தின் உடலுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர், 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் உறவினர்கள் விஜயகாந்தின் உடலைச் சுற்றிவந்து இறுதிச் சடங்களை செய்தனர். குடும்ப வழக்கப்படியான சில சடங்குகளும் செய்யப்பட்டன. 7 மணியளவில் விஜயகாந்தின் உடல் குழியில் இறக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி வரை கலையாத மக்கள்: தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். ஏற்கெனவே, இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதனிடையே இறுதி ஊர்வத்தில் வந்த மக்கள் கூட்டமும் சேர்ந்துவிட, அந்தப்பகுதியில் கூட்டம் அதிகமானது. முன்னதாக, அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த மக்கள், தங்கள் செல்போன் விளக்குகளை எரியவிட்டு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கைக் குறிப்பு – நாராயணசாமி விஜயகாந்த் ஆனார்… – பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணசாமி’. அது அவருடைய தாத்தாவின் பெயர். தனக்குத் தானே ‘விஜய் ராஜ்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே மதுரையில் அவரது நண்பர்கள் மத்தியில் ‘விஜி’ என்று பிரபலமானது. அவருடைய உறவினர்களில் சிலர் மட்டுமே அவரை கடைசிவரை நாராயணசாமி எனக் கூப்பிட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மிக அருகிலே மேற்கு மாசி வீதியில் நடிகர் விஜயகாந்த் வீடு உள்ளது. இந்த வீட்டில் தற்போது விஜயகாந்த் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வீட்டில்தான் விஜயகாந்த் பிறந்து சினிமாவுக்கு செல்லும் வரை வளர்ந்துள்ளார். இந்த வீட்டின் பெயர் ஆண்டாள் இல்லம். அவரது தாய் ஆண்டாள். அவரது நினைவாகவே அவரது தந்தை அழகர் சாமி இந்த வீடடுக்குகு பெயரை சூட்டியுள்ளார். அதற்கு முன் விஜயகாந்த் குடும்பத்தினர் இதே இடத்தில் ஓட்டு வீட்டில் வசித்துள்ளனர். இந்த வீட்டில் இருந்துகொண்டுதான் அவரது சினிமாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்னர், மதுரை மாகாளிபட்டியில் அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்டார். பகலில் ரைஸ் மில், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, இரவில் சினிமா என்று ஜாலியாக வலம் வந்த இளைஞர். அவரது நண்பர்கள் குழுவுக்கு ‘இரவு ராஜாக்கள்’ என்கிற தனிப் பட்டம் உண்டு. சினிமாக் கதைகள் பேசித் திரிந்து, சினிமாவில் சேரும் ஆசையில் ஸ்டில்ஸ் எடுத்துக் கொண்டு இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமான விஜயகாந்த் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு இணையான மாஸ் ஹிட்களுடன் ஜனரஞ்சகமான நடிகராக மக்கள் அபிமானம் பெற்றார். கருணாநிதியால் புரட்சிக் கலைஞர் பட்டம் பெற்றார். நடிகர் சங்கத்தின் தலைவராகி அதனை கடனில் இருந்து மீட்டெடுத்தார். சினிமாத் துறையில் கோளோச்சிய விஜயகாந்த் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார்.
விஜயகாந்த் கேப்டன் ஆனார்… – நடிப்பு, நடிகர் சங்கத் தலைவர் என்று வளர்ந்த விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பித்து எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என்று வளர்ந்தார். அதுவரை சினிமா ரசிகர்களால் கேப்டன் எனக் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் தேமுதிக தொண்டர்கள் அனைவராலுமே கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்டார். 2016 வரை அதிமுக, பாஜக, மோடி அபிமானம் என பரபரப்பாக இருந்த விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கி நின்றார். அறிக்கைகள் மூலமும், நிர்வாகிகள் மூலமும் கட்சியினருடன் தொடர்பில் இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் உடல்நிலை மிகவும் பின் தங்கவே அவரது அரசியல் வாழ்வு முடங்கியது. அதன்பின்னர் பிரேமலதா, சுதீஷ், சண்முகபாண்டியன் என அவரின் பிரதிநிதிகளாக குடும்பத்தினர் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் மனதில் நின்ற விஜயகாந்த் – தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி 7 ஆண்டுகளாகிறது, சினிமாவில் இருந்து விடுபட்டு 8 ஆண்டுகளாகிறது. இருந்தும் நேற்று அவர் உயிரிழந்த பின்னர் அவருக்காக தெரிவிக்கப்படும் இரங்கல்களின் ஆழமும், திரளும் மக்களின் எண்ணிக்கையும், சிந்தப்படும் கண்ணீரின் அளவும் ரஜினிகாந்த் சொன்ன இரங்கலை உறுதிப்படுத்துகிறது. ”வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” என்று ரஜினிகாந்த் சொன்னதுபோல் அவர் பெயர் வாழும்.