இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பாரிய தீவிபத்தில் சிக்கிய MV X-Press Pearl என்ற கப்பலின் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 24) வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம், கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாரிய சுற்றாடல் சேதத்திற்கு நட்டஈடு வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரவுள்ளது.
சிங்கப்பூர் கொடியிடப்பட்ட குறித்த கொள்கலன் கப்பல் 2021 மே 20அன்று கொழும்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்து போது தீப்பிடித்தது. இதனால் கப்பலில் இருந்த கழிவுகள் கடலில் கலந்து இலங்கையில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிக்கு ஏற்பட்டது.
ஏறக்குறைய இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த தீயினால் சேதமடைந்த கொள்கலன்கள், மைக்ரோபிளாஸ்டிக், பிளாஸ்டிக் துகள்கள், இரசாயனங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கடலில் பெருமளவில் கலக்கப்பட்டதாக விசாரணை அறிக்கைகள் மூலம் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த பேரழிவைத் தொடர்ந்து, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு (MEPA) சேதத்தை மதிப்பிடுவதற்கு பேராசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட நிபுணர்கள் குழுவை நியமித்தது.
கடல்சார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 26வது பிரிவின்படி, கப்பல் உரிமையாளர், நடத்துனர் அல்லது கப்பல் முகவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர தேவையான அனைத்து ஆவணங்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு வழங்கியது.
சிங்கப்பூரில் வழக்கை தொடர்வதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கேற்ப சட்ட விவகாரங்களை முன்னெடுத்து வருவதாக அண்மையில் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள் குழு, மதிப்பிடப்பட்ட 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈட்டை மீளப்பெற இலங்கையில் வழக்குத் தொடரப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. அதன் பிரகாரம் சிங்கப்பூரில் சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் காப்புறுதியாளரால் உள்ளூர் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்ட்டுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வழக்கு மற்றும் இழப்பீட்டு செயல்முறைகளைத் தடுக்க, கப்பலின் காப்பீட்டாளர்களிடமிருந்து உள்ளூர் அதிகாரி 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலஞ்சமாகப் பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N.S