சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

0
237

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியவற்றின் அரசியல் பயணத்தை மாற்றக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த, அதேவேளை மிகவும் ரகசியமான சந்திப்பு கடந்த சனிக்கிழமை (13) கொழும்பில் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்த இந்த சந்திப்பு, கொழும்பு கொள்ளுப்பிட்டி 5ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனியார் இல்லத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, இரு தலைவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளனர்.

அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, தற்போது தனித்தனியாக இயங்கி வரும் சமகி ஜன பலவேகய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை, எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் ஒன்றிணைப்பது அல்லது வலுவான கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் பங்கேற்பதற்கு முந்தைய நாள், அதாவது வெள்ளிக்கிழமை இரவு, ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் மற்றொரு விசேட கலந்துரையாடலும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கலந்துரையாடலில் ச.ஜ.ப. தவிசாளர் கபீர் ஹாசிம், பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மற்றும் லக்ஷ்மன் பொன்சேகா உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும், அங்கு எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே சனிக்கிழமை சஜித் – ரணில் நேருக்கு நேர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here