சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவு யாரிடம்? அமைச்சரின் பதில் தெரியாது!

0
26

– வீட்டுக்குச் சென்று சட்ட புத்தகத்தைப் பார்க்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

சிறைச்சாலைக்குள் ஏற்படும் அவசர சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது குறித்து தனக்கு தெளிவான அறிவில்லை என்றும், அந்த உத்தரவை வழங்குவது அமைச்சரின் பொறுப்பு அல்ல என்பதையே தாம் அறிந்துள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதிக்கு ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக அதிகாரம் இருந்தாலும், சிறைச்சாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவு வழங்கும் நடைமுறை குறித்து தனக்கு உறுதியான அறிவில்லை என்றார்.

மேலும், தமக்கு சட்டப்படி அத்தகைய உத்தரவை வழங்கும் எந்த அதிகாரமும் இல்லை என்றும், தினமும் சுமார் 400 தொலைபேசி அழைப்புகள் வருவதால் அனைத்துக்கும் பதிலளிப்பது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளை தொடர்புகொள்வதிலும் சில சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் இருப்பதாகத் தெரியும் என்றும், இராணுவம் மற்றும் பொலிஸில் துப்பாக்கிச் சூடு தொடர்பான கட்டளைச் சங்கிலி (Chain of Command) நடைமுறை இருப்பதைத் தெரிந்திருந்தாலும், சிறைச்சாலைகளில் அதே நடைமுறை உள்ளதா என்பதை வீட்டுக்குச் சென்று சட்டப் புத்தகத்தைப் பார்த்த பிறகே கூற முடியும் என்றார்.

“இந்தக் கேள்வியை முதன்முறையாக நீங்கள் தான் என்னிடம் கேட்டீர்கள். வீட்டுக்குச் சென்று அதைப் படித்து பார்க்க வேண்டும். அதற்கு துல்லியமான பதிலை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அந்த உத்தரவை அமைச்சர் வழங்க வேண்டியதில்லை என்பதையே நான் உறுதியாக அறிவேன்,” என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்தக் கருத்துகளை தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here