இது ‘சிஸ்டம் சேஞ்ச்’ அல்ல; பழைய அமைப்பின் தொடர்ச்சி!

0
19

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நீர்கொழும்பு சிறைச்சாலை துயரச் சம்பவத்திற்குப் பின்னர் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், மக்கள் எதிர்பார்த்த ‘சிஸ்டம் சேஞ்ச்’ தோல்வியடைந்துவிட்டதை வெளிப்படுத்துவதாகக் கூறினார். உண்மையான பொறுப்புக்கூறல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பார் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“‘சிஸ்டம் சேஞ்ச்’ உண்மையாக நடந்திருந்தால், அமைச்சர் பதவி விலகியிருப்பார். மக்கள் வாக்களித்தது இதற்காக அல்ல. இன்று நாம் காண்பது புதிய அமைப்பை அல்ல; பழைய அமைப்பின் தொடர்ச்சியையே,” என்று தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்ததையும், சுமார் 150 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏற்க வேண்டும் என்றார்.

“‘நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்; பின்னர் அதைப் பார்ப்பேன்’ என்று கூறிவிட்டு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. பொறுப்புக்கூறல் என்பது வார்த்தைகளால் அல்ல, செயலால் நிரூபிக்கப்பட வேண்டியது,” என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தப் பேரவலுக்குப் பிறகும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் கூடிய உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“27 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 150 பேர் வைத்தியசாலைகளில் உள்ளனர். ஆனால் இதுவரை இந்த நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பொறுப்புடன் ஒரு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை உள்ளது,” என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும், சிறைச்சாலை அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வந்த கட்டமைப்பு குறைபாடுகளை அரசாங்கம் சரிசெய்யத் தவறியதே இந்தச் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் என அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறைச்சாலை சம்பவத்திற்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்—சிறைச்சாலை கொள்ளளவை அதிகரித்தல், மேலதிக சிறைச்சாலை அதிகாரிகளை நியமித்தல், போதைப்பொருள் தொடர்பான சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் புதிய சிறைச்சாலை அமைத்தல் உள்ளிட்டவை—நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

10,000 முதல் 12,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கக்கூடிய சிறைச்சாலை அமைப்பில் தற்போது சுமார் 40,000 முதல் 45,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பது கடுமையான நெரிசலையும் பாதுகாப்பு சவால்களையும் உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதி மருத்துவ அறிக்கைகளை விரைவுபடுத்துதல், விளக்கமறியல் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், நிரந்தர சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை நியமித்தல் மற்றும் சிறைச்சாலை நிர்வாகத்தை வலுப்படுத்துதல் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடைமுறை நடவடிக்கைகள் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சிறைச்சாலை விவகாரத்தைத் தாண்டி, திட்வா புயலின் விளைவுகள், தீவிரமடைந்த டெங்கு பரவல், அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கான உர விநியோக தாமதம் உள்ளிட்ட பல தேசிய பிரச்சினைகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

விவசாயிகள் இன்னும் அதிக விலைக்கு தனியார் துறையிலிருந்து உர வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உரையை நிறைவு செய்த நாமல் ராஜபக்ஷ, “மக்கள் பொறுப்புக்கூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய ‘சிஸ்டம் சேஞ்ச்’ ஒன்றுக்காகவே வாக்களித்தனர். ஆனால் இன்று அவர்கள் காண்பது அதுவல்ல. பழைய அரசியல் கலாசாரமும் பழைய நிர்வாக முறையும் புதிய பெயரில் தொடர்கின்றன. இந்தத் துயரச் சம்பவத்திற்கான அரசியல் பொறுப்பை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏற்று, நாடாளுமன்றத்தில் முழுமையான விளக்கமொன்றை வழங்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here