கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் தீவிர நிலையில்

0
48

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தீவிரமான கட்டத்தில் இருப்பதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்படும் வழக்கு, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நோக்கில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதுவரை இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பின்னர், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நவம்பர் மாத நடுப்பகுதி வரை இரண்டு வாரங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள வழக்கொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் அவர் இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமான கட்டத்தில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருப்பின், மனிதாபிமானக் காரணங்களின் அடிப்படையில் அதற்கு அனுமதி வழங்க முடியும் என்றும் திலீப பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here