– பாதுகாப்புப் பிரிவினரிடம் நடவடிக்கை கோரிக்கை
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடியுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், சடங்குகள் மற்றும் பலி, தோவில்கள் மூலம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ‘ஜன பலய’ கூட்டமைப்பின் தலைவிகளில் ஒருவரான கலாநிதி கீதிகா தர்மசிங்க, அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உருவத்தை மண்ணால் செய்து, அதற்கு சடங்குகளை நடத்தி, மகாசோன் யக்காவை வரவழைத்து, அவரது தலையை ஏழு துண்டுகளாகப் பிளந்து கொலை செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதியைக் கொலை செய்வதே அவர்களுடைய நோக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. அங்கு இருக்கும் சமந்தபத்திர, கஸ்ஸப போன்ற பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு பௌத்த மதம் மற்றும் தர்மம் தொடர்பில் எவ்வித புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே, ஜனாதிபதியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு செயற்படுவதாக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நடத்தும் சடங்குகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குற்றவியல் சட்டத்தில் முக்கியமான விடயம் ஒன்றுதான், குற்றமொன்றைச் செய்வதற்கான நோக்கம் இருந்ததா என்பதை ஆராய்வதாகும். விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடியுள்ள சமந்தபத்திர, கஸ்ஸப போன்ற பிக்குகளுக்கு ஜனாதிபதியைக் கொலை செய்யும் நோக்கம் இருப்பதாக நான் கருதுகிறேன். அவரைக் கொலை செய்வதற்கான திட்டமொன்றை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இது மக்களின் அரசாங்கம். இந்த அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைக் கொலை செய்யும் நோக்கத்துடன் யாராவது செயற்பட்டாலோ அல்லது அதற்குத் திட்டமிட்டாலோ, அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இந்த அரசாங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும். பௌத்த காவியுடையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) ‘ஜன பலய’ அமைப்பினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கலாநிதி கீதிகா தர்மசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
