நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

0
28

தமக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது தமது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கேள்வி: உங்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இதுவரை அதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. என்ன நடந்துள்ளது?

பதில்: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுமானால், அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். சபாநாயகர் என்ற வகையில் எனது தரப்பு விளக்கங்களை முன்வைப்பதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன், இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனை நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எனினும், இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவே கருதுகிறேன். எதிர்க்கட்சியினர் மீண்டும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நாட்டு மக்களுடன் பேசுவதற்கும் நாடாளுமன்றத்தில் எனது கருத்துகளை முன்வைப்பதற்கும் இத்தகைய பிரேரணை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி: இவ்வாறான விடயத்தில் நீங்கள் ஏன் இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: சமூக ஊடகங்களிலும் சில ஊடகங்கள் எனக் கூறிக்கொள்பவர்களிடமும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தங்களது குறுகிய தனிப்பட்ட நலன்களுக்காகவும் செயற்படும் போக்கைக் காண முடிகிறது.

இதன் மூலம் நலன் முரண்பாடுகள் (Conflict of Interest) தொடர்பான விடயங்களும் எழுப்பப்படுகின்றன. இவற்றுக்குப் பதிலளிக்கும்போது, சிலர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே செயற்படுகின்றனர். எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான விவாதம் ஒன்று நடைபெறுவது நல்லது என நான் நம்புகிறேன்.

கேள்வி: எந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா?

பதில்: தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில், அதற்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.

அந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படும் நாளில், உண்மையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்வார்கள். அது எப்போது கொண்டுவரப்படும் என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

எங்களிடம் அதற்கான பதில்கள் உள்ளன. அனைத்து விடயங்களையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

உண்மையைக் கண்டறிவது சில நேரங்களில் கடினமானதும் கசப்பானதுமாக இருக்கலாம். ஆனால், பொய் என்பது சோடாப் போத்தலைத் திறந்தவுடன் நுரை பொங்குவதைப் போன்றது. அது மிகக் குறுகிய காலத்திற்கே ஆதிக்கம் செலுத்தும். உண்மையை நிரந்தரமாக மறைத்துவிட முடியாது. உண்மையை வெளிக்கொணர்வதற்காக நாம் செயற்படுகிறோம். எனவே, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here