மரண தண்டனை தொடர்பான விவாதம் மீண்டும் நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காலத்துக்கு காலம் பேசப்படும் இந்த விடயம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் தீவிரமாக பேசப்பட்டது.
தற்போது மரண தண்டனை தொடர்பான விவாதம் மீண்டும் முன்னிலைக்கு வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை வெளியிட்ட அறிக்கை. மற்றொன்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பிலேயே கர்தினால் ஆண்டகை தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனிதநேய அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் இந்தக் கருத்து, தண்டனையின் நோக்கம் மனிதர்களைத் திருத்துவதே தவிர அவர்களை அழிப்பது அல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடலிலும், போதைப்பொருள் வலையமைப்புகளை ஒழிப்பதற்காக மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தப்படுகிறது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அவசியமானவை என்றாலும், விரைவான நீதிமன்ற விசாரணைகள், குற்றவாளிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குதல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை முழுமையான தண்டனைக் காலம் நிறைவடையும் வரை விடுதலை செய்யாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், சிறைச்சாலைகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்குகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போதைப்பொருட்களின் அளவுக்கும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமானதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், இழந்த உயிருக்கு யார் பொறுப்பேற்பது என்ற முக்கியமான கேள்வியும் எழுப்பப்படுகிறது.
எனவே, “தண்டனைக்கு தண்டனை” என்ற பழிவாங்கும் அணுகுமுறைக்கு பதிலாக, சட்ட அமுலாக்கம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதே தீர்வாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, உணர்ச்சிவசப்பட்டு சில அதிகாரிகளால் முன்வைக்கப்படும் மரண தண்டனை தொடர்பான யோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி சிந்திக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
