எல் நினோ – லா நினா நிலைமை குறித்து 220 இலட்சம் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் – சஜித்

0
167

தற்போது பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ள நிலையில், வறட்சி ஏற்படும் அபாயம் குறித்து நிபுணர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, எல் நினோ – லா நினா நிலைமை குறித்து புரிந்துகொள்ள வேண்டும் எனவும், இது நிபுணர்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எல் நினோ நிலைமை காரணமாக நாட்டின் ஒரு பகுதியில் வறண்ட காலநிலை உருவாகியுள்ளதாகவும், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் எல் நினோ – லா நினா நிலைமையின் தீவிரத்தன்மை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி ஏற்படும் போது குடிநீர் பிரச்சினை, வறட்சி நிலைமை மற்றும் நீர்மின் உற்பத்திக்குத் தேவையான நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, எல் நினோ – லா நினா நிலைமையின் மற்றொரு விளைவு கடும் மழைவீழ்ச்சியாகும் எனவும், இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே, எல் நினோ – லா நினா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு சிறந்த புரிதல் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வீரவில் ஸ்ரீ விவேகாராமயில் சைத்திய ராஜயாணன் விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.

எல் நினோ நிலைமை மார்ச் மாதத்திலேயே ஏற்பட்டிருந்தால், யால பருவத்தைக் கூட வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ நிலைமை காரணமாக அடுத்த சில மாதங்களில் வறண்ட காலநிலை நிலவுவதுடன், வெப்பநிலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான தகவல்களை நிபுணர்களிடமிருந்து பெற்றதுடன், காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களிலிருந்தும் தாம் அறிந்துகொண்டதாக சஜித் பிரேமதாச கூறினார்.

எல் நினோ நிலைமை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றுவதுடன், மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து, வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் நிலை ஏற்படலாம் எனவும், இதனால் யானை–மனித மோதல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

இதன் விளைவாக யானைகளும் மனிதர்களும் உயிரிழப்பதுடன், பயிர்ச்செய்கைகளுக்கும் சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்படக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here