பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (26) அதிகாலை சுமார் 04.00 மணியளவில் வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றியவர்களே காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், அங்கு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




