முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக இந்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
விசாரணைகளின் தற்போதைய நிலைமை மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரிட்டனுக்குச் சென்றபோது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது.
