– கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சர்ச்சைக்குரிய Krrish பணப்பரிவர்த்தனை வழக்கில் வழங்கப்பட்டிருந்த பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (18) இடைக்காலத் தடை விதித்துள்ளதாக எமது நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த நவம்பர் 3ஆம் திகதி நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கியிருந்தது.
அந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவின் இடைக்கால நிவாரணக் கோரிக்கை தொடர்பாக, நீதிபதி லால் பண்டார ரணசிங்க இன்று தீர்மானம் அறிவிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
- ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின்படி, குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட சந்தேகநபர்களுக்கு அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே பிணை வழங்க முடியும்.
- நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கும்போது அந்த விதிவிலக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஆணைக்குழு வாதிட்டது.
- நாமல் விளக்கமறியலில் இருந்தபோது, முன்னர் சாட்சியமளிக்கத் தயங்கிய இருவர் முன்வந்து தகவல் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
- முக்கிய சாட்சியான நிமல் பெரேரா, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
- பிணையில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது அழுத்தம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் ஆணைக்குழு வெளியிட்டது.
நாமல் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பிணை வழங்கப்பட்டமை சட்டபூர்வமானது என வாதிட்டார்.
நாமலின் தாயார் ஷிரந்தி ராஜபக்சவின் கடுமையான உடல்நிலை தொடர்பான குடும்பச் சூழ்நிலையை அசாதாரண காரணமாகக் கருத்திற்கொண்டே நீதவான் பிணை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இடைக்கால உத்தரவின் மூலம் பிரதான மீளாய்வு மனுவில் கோரப்படும் இறுதி நிவாரணத்தையே முன்கூட்டியே வழங்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
இந்தியாவின் Krrish நிறுவனத்திற்குக் கொழும்பு கோட்டையிலுள்ள Transworks Square காணியைப் பெற்றுக்கொடுக்கவும், அபிவிருத்தித் திட்டத்திற்கான அனுமதிகளை விரைவுபடுத்தவும் உதவியதற்குப் பிரதிபலனாக நாமல் ராஜபக்சவுக்கு ரூ.70 மில்லியன் (7 கோடி ரூபா) மூன்று தவணைகளில் வழங்கப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற தனியான Airbus பணச்சலவை வழக்கின் நடவடிக்கைகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதே Airbus பரிவர்த்தனை தொடர்பாக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கு தனியாகத் தொடர்கிறது.
